வரலாற்றில் திருகோணமலை

இதுவரை திருகோணமலையின் வரலாறு ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன. ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நாகரிக வளர்ச்சியை வரலாற்றுக்கு முந்திய காலம், வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.

ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?

மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்குரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும்போது பின்வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே ஆதாரங்களாக கொள்ள முடியும்.

பெரும்கற்கால (கி.மு. 500க்கு முன்னர்) திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்), திரியாய், தென்னமரவாடி, கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள் ஆகியவற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்தபட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள், தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல, திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம் உயர் தொழில்நுட்பம் கொண்டவர்களாகவும், கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது. அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம் (ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது.

இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது. அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது. அதற்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.

கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால் அதற்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார்? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளப்படுத்துவதே இயக்கர், நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். அதைவிட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்களின் வடிவமைப்பும் காலபகுதியும் தமிழ்நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில் இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…”

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்

உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்துக்கு பின் வந்த காலப்பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன. அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு. 500 ஆண்டளவில் விஜயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஆனால் மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில் இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.

அப்படித்தான் விஜயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது.

விஜயன் வருகைக்கு பின்னர் விஜயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விஜயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.

அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறைமுகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?

அப்படியானால் விஜயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர். இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர். ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.

ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம்மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது. துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் அரசுகளை வென்றதாக கூறுகிறது.

அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும் ஆண்டதாக குறிப்பிடவில்லை. ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம் (திருமலை) சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது .அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகளை சந்தித்தது.

கி.மு. 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம். இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான். இதே மாதிரித்தான் சமணம், தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவனரீதியாக இலங்கைத்தீவில் காலடி எடுத்து வைத்துள்ளன.

கி.மு. 3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனனால் கோகர்ணம் (திருகோணமலை), எரகாவில்லை (ஏறாவூர்), மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகியவற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசேனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில்தான் இருந்திருக்கின்றன.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . ஏனென்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்கவில்லை. கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது. அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்தபட்டிருக்க வேண்டும். இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு, மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.

கி.பி. 7ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்தக்கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் குறிப்பிடுகிறது.

நன்றி - VAZHVU.COM