வென்றாகிலும் பார்க்கட்டும்!

ஒன்றுபடு தமிழா!
ஒருபொழுது தாமதிக்காதே
கொன்றுவிடுவார் உன்னை
கூண்டோடு!

வெறியர் நினைத்தார் - உன்னை
வேரறுக்க நினைத்தார்.
வேறெதுவும் கருதாமல் நீ
ஓரணியில் இல்லாவிடில்
பார் அவனியில் உன்னை - பிறர்
யார் அவனென கேட்கவைத்துவிடுவார்.

கொடி திரண்டு நிற்கும்போதே
கோடரி கொண்டு திரிந்தவர்கள்.
பிரிந்து நீ கிடந்தால்
பிடுங்கியே எறிந்துவிடுவார்.

மேய்ப்பன் இருந்தபோதே
உன்னை இரையாக்க
வாய்ப்புப்பார்த்திருந்தன ஓநாய்கள்.

கட்டுக்குலைந்த கோப்புக்களாய் நீ
எட்டுத்திக்கும் பிரிந்து கிடந்தால்...
துச்சம் பெரிதென சிதறிக்கிடந்தால்...
மிச்சம் மீதியின்றி குதறிவிடுவார்.

ஒன்றுபடு தமிழா!
ஒருபொழுது தாமதிக்காதே
கொன்றுவிடுவார் உன்னை
கூண்டோடு!

சிறுசிறு குழுக்களாகி
சிறுமைப்பட்டுக்கிடக்கிறாய்.

பெரு வரை ஆண்டவன் என்றும்
பெருமைகள் கொண்டவன் என்றும்
பெயர்மட்டும் இருந்தென்ன பலன்?

உன்.....
கருவரையும் அழிக்கப்படுகிறது அங்கே!
கருவறையும் பறிக்கப்படுகிறது அங்கே!

நீ.....
மரு மட்டும் ஒட்டிவிட்டு - அதை
மாறுவேடம் என சொல்லிக்கொண்டு
வேறு யாரோபோல் நடிக்கிறாய்.

செத்துக்கொண்டிருக்கிறது இனம் அங்கே - நீ
சொத்துக்களை அடைந்துவிட துடிக்கிறாய்.

தூசு என உனக்காக உயிரை
வீசி எரிந்தவரை வைத்தும் நீ
காசு பார்த்துவிட நினைக்கிறாய்.

இனத்துக்குள்ளேயே பிளவுபட்டு
உன்னையே நீ அழித்துக்கொண்டு
இன்னொருவனை ஏன் வைகிறாய்?

ஒன்றாக நீ இருந்துபார்.
எவராகிலும் உன்னை
என்றாகிலும் வென்றாகிலும் பார்க்கட்டும்!