உன்னவனாய் நான்...

- ரிஷிஷ்காந் -

என்னுடன்.....
நீ இருந்தால் போதும் - என்
சாலை எங்கும்
சாரல் தூறும்.

என்னை.....
நீ உணர்ந்தால் போதும் - என்
வானவில்லில்
வண்ணம் கூடும்.

நான் ஒரு பறவை
நீ எந்தன் வானம்.
நீ இல்லை என்றால்...
சிறகுகள் இருந்தும்
நான் ஊனம்!

வருவாய் எந்தன் அருகில் - நான்
சரிவேன் உந்தன் மடியில்.
உயிராய் உன்னை கொள்வேன் - உன்
நிழலாய் எங்கும் செல்வேன்.

உனது விழி நடனம் கண்டு
உருகிவிட்டேன்!
கனிந்த இதழ் கவனம் கொல்ல
காயப்பட்டேன்!
நளின நடை அழகை காண
உயிரை விற்றேன்!
இடையின் பெயரில் எரியும் தீ
ஐயோ! செத்தேன்!

புலர்கின்ற என் காலைகளில்
மலர்கின்ற பூவாய் நீ!
நீள்கின்ற என் சாலைகளில்
நிலவொளியின் சாரல் நீ!
கொதிக்கின்ற என் பாலையில் கூட
குதிக்கின்ற மழையாய் நீ!
நடக்கின்ற என் பாதையில் மெல்ல
கடக்கின்ற காற்றாய் நீ!

நீ.....
விண்ணவளின் மண் வரவா!
உன்னவனாய் நான் வரவா?
என் உயிரையும் தந்திடவா? - பதிலுக்கு
உன் இதயம் மட்டும் தந்திட வா!

காதல்..... என்னை
நோயாய் வாட்டுகிறது
மருந்தாக நீ ஆவாயா?

காதல்..... என்னை
பேயாய் ஆட்டுகிறது.
மந்திரம் ஏதும் நீ அறிவாயா?

காதல்..... என்னுள்
தணலாய் தகிக்கிறது.
தண்ணீராய் நீ வருவாயா?

இல்லை.....
கண்களுள் மட்டும் நீ இருந்துகொண்டு
கண்ணீரை மட்டும்தான் தருவாயா?

என்னுடன்.....
நீ இருந்தால் போதும் - என்
சாலை எங்கும்
சாரல் தூறும்.

என்னை.....
நீ உணர்ந்தால் போதும் - என்
வானவில்லில்
வண்ணம் கூடும்.