நீ... நினைவுகள்.....

- ரிஷிஷ்காந் -

விழியின் திரையில்
விழுந்தவளே
என்
இதயம் முழுதும்
நிறைந்தவளே.....

கனவாய் தினமும் வருபவளே
வரும்
காலம் என்னுடன் வாழ்பவளே.....

உயிரில் உன்னை
குழைத்தெடுத்து
உருவச்சிலையாய்
செய்திடவா?

உள்ளம் ஒரு
கோயிலென
அதன்
உள்ளே வைத்து
பாடிடவா?

தீயாக வந்தாய்
சிறு
தீண்டலில் கொன்றாய்.
பின்னர்
தாயாக மாறி
என்னை
தாங்கிக்கொண்டாய்.

சுடுதேநீர் போல
நாக்கில்
சுர்ர்ரென சுட்டாய்.
தேனின்
சுவையாக மாறி
என்னுள்
தங்கிவிட்டாய்.

கலையாக வந்தாளே
அவள்
கறையில்லா வெண் தாளே!
கனி போல இனியவளே
என்
கவிதைகளில் இனி அவளே!

பேசும்போதே
கண்கள் என்னும்
ஆயுதத்தால்
தாக்குகின்றாள்.

போர்க்குற்றம் புரிந்துவிட்டு
தெரியாததுபோல் போகின்றாள்.

தீ அவளே!
இரவில்
தீயவளே!

கோபக்கொழுவலில்
எதிரியும் அவளே!
மோகத்தழுவலில்
எரியும் திரியும் அவளே!

கரை சேரும் கள்ளம் உள்ள
அலைபோல நெஞ்சம் மாறுதே!
நுரையீரல் செல்லவில்லை
உதிரத்தில் ஒக்சிஜன் ஏறுதே!

நிலவின்று இல்லை வானில்
நினைவுகள் நிலவாய் போனதே!
கனவுகள் தின்று காதல்
கல்வெட்டு போலே ஆனதே!

பூங்காற்றின் வாசம் இதுதானா
புதிதாக உள்ளம் உணர்கிறதே!
புலர்கின்ற காலை புல்நுனியின்
பனிபோல உயிரும் உருள்கிறதே!

காரணம் யார்
காரிகைதான்.
கையில் வந்த
தூரிகைதான்.

வண்ணங்கள் கூட்டிவந்து
வாழ்வில் வானவில் தீட்டினாள்